குன்னூர் தாலுகாவில் கனமழை: கேரட் பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் கவலை - கால்நடைகளுக்கு தீவனமாகும் அவலம்

குன்னூர் தாலுகாவில், சமீபத்தில் பெய்த கனமழையில் கேரட் பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் அழுகிய கேரட் பயிர்களை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-08-24 22:00 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.

மேலும் புருக்கோலி, சல்லாரை போன்ற இங்கிலீஷ் காய்கறிகளையும் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். குன்னூர் தாலுகாவில் ஜெகதளா, காரக்கொரை, கிடங்கு, ஆஸ்பத்திரி சேரி போன்ற பகுதிகளில் மலைக்காய்கறி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இங்குள்ள விவசாய நிலங்களுக்கு ஓடை மற்றும் கிணறுகள் மூலம் நீர் பாசனம் செய்யப்படுகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் குன்னூர் தாலுகாவில் கனமழை பெய்தது. அப்போது விவசாய நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. ஆனால் மழை ஓய்ந்த பிறகு உடனடியாக வெள்ளம் வடியவில்லை. அதற்கு சில நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் அதற்குள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த கேரட் பயிர்கள் அழுகின. மேலும் அழுகிய கேரட் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் கேரட் பயிர்களை அறுவடை செய்யாமல், கால்நடைகளுக்கு தீவனமாக போட்டு வைத்து உள்ள அவல நிலையை காண முடிகிறது. இதுகுறித்து கிடங்கு பகுதியை சேர்ந்த விவசாயி மோகன் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கேரட் பயிரிட்டு இருந்தோம். கனமழைக்கு முன்பு மார்க்கெட்டுகளில் கேரட் கிலோவுக்கு ரூ.70 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது கேரட் கிலோவுக்கு ரூ.35 வரை கொள்முதலாகிறது. இந்த விலை கட்டுப்படியாகாது. மேலும் கனமழையில் கேரட் பயிர்களும் முற்றிலும் அழுகி விட்டன. அதை அறுவடை செய்தாலும் மேலும் நஷ்டமடைய நேரிடும். எனவே அழுகிய கேரட் பயிர்களை கால்நடைகளுக்கு தீவனமாக போட்டு வைத்து உள்ளோம். எங்களது இந்த நிலையை கருத்தில் கொண்டு உரிய நிவாரண தொகை வழங்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்