முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ்; ஊட்டி தாலுகாவில் 660 மனுக்கள் பெறப்பட்டன
முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் ஊட்டி தாலுகாவில் 600 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
ஊட்டி,
தமிழகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், வெள்ளிக்கிழமை தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் மற்றும் விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அனைத்து நகர்ப்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி குறிப்பிட்ட நாளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பிற துறைகளை சேர்ந்த ஒரு அலுவலர் குழு ஆகஸ்டு மாத இறுதிக்குள் சென்று மனுக்களை பெறுவார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் கடந்த 22-ந் தேதி முதல் கிராமங்கள், வார்டுகள் வாரியாக முதல் அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. ஊட்டி நகராட்சி 30-வார்டு ஆர்.கே.புரம் சமுதாயக்கூடம், 31 மற்றும் 32 வார்டுகளுக்கு எல்ஹில் சமுதாயக்கூடம், தும்மனட்டி, குந்தசப்பை, கப்பச்சி, கப்பந்தொரை ஆகிய கிராமங்களுக்கு தும்மனட்டி கிராம நிர்வாக அலுவலகம், எப்பநாடு, கெங்கமுடி, காந்திநகர், பிக்கபத்திமந்து ஆகிய கிராமங்களுக்கு எப்பநாடு கிராம நிர்வாக அலுவலகம்,
சின்னக்குன்னூர், பெந்தட்டி, கடநாடு, பாரமன்னு, தாவெண, இந்திரா நகர், ஆலட்டி, நந்தட்டி ஆகிய கிராமங்களுக்கு கடநாடு கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் நடைபெற்றது. ஊட்டி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அந்தந்த பகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும், உடைந்து காணப்படும் நடைபாதையை பழுதுபார்க்க வேண்டும், கனமழையால் இடிந்து விழுந்த தடுப்புச்சுவர்கள் கட்ட வேண்டும் மற்றும் தெருவிளக்கு, குடிநீர் வினியோகம், சுகாதாரம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
ஊட்டி தாலுகாவில் கடந்த 22-ந் தேதி முதல் இதுவரை பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 660 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் தாசில்தார் அலுவலகத்தில் கணினியில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க அனுப்பி வைக்கப்படும். மனுக்கள் மீது துறை மூலம் ஒரு மாத காலத்தில் தீர்வு காணப்படும். இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஊட்டி நகராட்சி 25 மற்றும் 26-வது வார்டுகளுக்கு பெனட் மார்க்கெட் சமுதாயக்கூடம், 27-வது வார்டுக்கு குருசடி காலனி சமுதாயக்கூடம், 28 மற்றும் 29-வது வார்டுகளுக்கு முள்ளிக்கொரை சமுதாயக்கூடம், கெந்தோரை, முனியாபுரம் காலனி, தும்மனாடா, பட்டர்கெம்பை ஆகிய கிராமங்களுக்கு தும்மனட்டி கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நடக்கிறது. அதேபோல் வருகிற 31-ந் தேதி வரை அனைத்து வார்டுகள் மற்றும் கிராமங்களில் நடைபெற உள்ளது.