தேடப்படும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு: கோவையில் 2 பேர் பிடிபட்டனர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

தேடப்படும் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் 2 பேரை கோவை மாநகர போலீசார் பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-08-24 23:00 GMT
கோவை, 

தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர், இலங்கையைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவர்கள் இந்துக்கள் வேடத்தில் கோவையில் பதுங்கி இருப்பதாகவும், நாசவேலையில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் 2 ஆயிரம் போலீசாரும், புறநகரில் 1,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 3-வது நாளாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து கமாண்டோ வீரர்கள் 80 பேர் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மாநகர பகுதியில் 40 பேரும், புறநகர் பகுதியில் 40 பேரும் என அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், கோவையில் சோதனை நடத்தி 2 வாலிபர்களை மடக்கிப்பிடித்தனர். அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சித்திக் (வயது 27). இவர் சென்னையில் வேலை செய்து வருபவர். மற்றொருவர் கோவை உக்கடம் பொன்விழா நகரை சேர்ந்த ஜாகீர் (25) என்று தெரிய வருகிறது. இந்த 2 வாலிபர்களிடமும் கோவை புறநகர் பகுதியில் ரகசிய இடத்தில் வைத்து டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் பிடிபட்ட 2 வாலிபர்களும், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அப்துல் காதர் என்பவருடன் செல்போனில் தொடர்ந்து பேசியுள்ளதாக தெரிகிறது. அப்துல் காதர் கொச்சியில் கைது செய்யப்பட்டு உள்ளார். லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு உதவி வந்தவர் என்பதால், அவருடன் செல்போனில் 2 வாலிபர்களும் பேசியது ஏன்? சதி வேலைக்கு திட்டமிட்டனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் இருவரும் தமிழகத்தில் ஊடுருவி கோவையில் பதுங்கி இருப்பதாக கருதப்படும் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

கோவையில் போலீசின் விசாரணை வளையத்துக்குள் சிக்கி உள்ள சித்திக், ஜாகீர் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில்தான் அவர்கள் கைது செய்யப்படுவார்களா? என்பது தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்