சிறப்பு கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து வாயில் கருப்பு துணி கட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
சிறப்பு கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பிச்சனூர் கிராம மக்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போத்தனூர்,
மத்திய அரசின் நீர் மேலாண்மை இயக்கம் மூலம் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டுள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. பிச்சனூர் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் குளம், குட்டை, கண்மாய்கள், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி பிச்சனூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்தாமல், கூட்டம் நடந்ததாக வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டருக்கு பொய்யான தகவலை அனுப்பியதாக கூறி கிராம மக்கள் சிறப்பு கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து, வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அப்போது மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் கண்டியன்கவுண்டர் குட்டையை சீரமைக்க வேண்டும். குட்டைக்கு வரும் நீர் வழிப்பாதையை சரி செய்து, அங்கு இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும் குட்டைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து ஊராட்சி செயலாளர் சாமிநாதன் கூறும்போது, கண்டியன்கவுண்டர் குட்டை நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கி உள்ளோம்.
ஒரு சில தினங்களில் நில அளவையர் நேரில் வந்து ஆய்வு செய்த பின் பொக்லைன் எந்திரம் மூலம் உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.