அம்பையில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; இளம்பெண் பலி கணவர்-குழந்தை காயம்

அம்பையில் கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் இளம்பெண் பலியானார். அவருடைய கணவர்-குழந்தை காயம் அடைந்தனர்.;

Update: 2019-08-24 22:00 GMT
அம்பை, 

அம்பையில் கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் இளம்பெண் பலியானார். அவருடைய கணவர்-குழந்தை காயம் அடைந்தனர்.

தையல் தொழிலாளி

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ஜமீன்சிங்கம்பட்டி ஆசாரிமார் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் முருகேசன் (வயது 30). இவருடைய மனைவி காசியம்மாள் (23). இவர்களுக்கு 1½ வயதில் மித்ரன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

நேற்று மாலையில் முருகேசன் தன்னுடைய மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் அம்பையில் உள்ள வாரச்சந்தைக்கு சென்றார். அவர்கள் அங்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு, மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்

அம்பை தாலுகா அலுவலகம் அருகில் சென்றபோது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட காசியம்மாள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார். அவருடைய கணவரும், குழந்தையும் லேசான காயம் அடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே காசியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த முருகேசன், குழந்தை மித்ரனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்