சிவகிரி அருகே பனை மரத்தில் லோடு வேன் மோதல்; பெண் பலி 4 பேர் படுகாயம்
சிவகிரி அருகே பனை மரத்தில் லோடு வேன் மோதியதில் பெண் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.;
சிவகிரி,
சிவகிரி அருகே பனை மரத்தில் லோடு வேன் மோதியதில் பெண் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
தலையணைக்கு பயணம்
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விசுவநாதபேரி சக்தி கீழமேல் தெருவைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மனைவி முத்துசெல்வி (வயது 38). இவருடைய மகன் சக்திகுமார் (17). இவர்கள் 2 பேரும் நேற்று காலையில் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தலையணையில் குளிப்பதற்காக லோடு வேனில் சென்றனர்.
லோடு வேனை விசுவநாதபேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர் (45) என்பவர் ஓட்டினார். அந்த லோடு வேனில் சங்கரின் தாயார் முனியம்மாள் (60), மனைவி தேவி (35) ஆகியோரும் பயணம் செய்தனர்.
பெண் பலி
இவர்கள் அனைவரும் தலையணையில் குளித்து விட்டு மீண்டும் லோடு வேனில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். சிவகிரி அருகே உள்ள விசுவநாதபேரி பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லோடு வேன் சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் லோடு வேனில் இருந்த முத்துசெல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் லோடு வேனில் இருந்த சக்திகுமார், சங்கர், முனியம்மாள், தேவி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக சிவகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சக்திகுமார், சங்கர் ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் பலியான முத்துசெல்வி உடல் பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவகிரி அருகே பனை மரத்தில் லோடு வேன் மோதியதில் பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.