கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை

கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2019-08-24 22:15 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஓடை ஆக்கிரமிப்பு

கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து லாயல் மில் மேம்பாலம் வரையிலும் சுமார் ரூ.7 கோடி செலவில் நாற்கரசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடை ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஓடை ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அதன் உரிமையாளர்களே அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வருவாய் துறை சார்பில், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதற்குரிய செலவை கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். எனவே வழக்கு தொடர்ந்தவர்களை தவிர்த்து, மற்றவர்கள் தங்களது கடைகளை காலி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

விரைவில் அகற்றம்

அதன்படி அங்கு முதல்கட்டமாக நேற்று காலையில் 13 கடைகளை அகற்ற வருவாய் துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து அந்த கடைகளில் இருந்த பொருட்களை கடைக்காரர்களே அப்புறப்படுத்தினர். இதற்கிடையே அங்கு பாதுகாப்புக்கு வர வேண்டிய போலீசார் மாற்று பணிக்கு சென்றனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஒத்தி வைக்கப்பட்டது. ஓடை ஆக்கிரமிப்பில் உள்ள கடைகள் விரைவில் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்