தூத்துக்குடி மாவட்டத்தில் குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாத்தான்குளம்,
தூத்துக்குடி மாவட்டத்தில் குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
சாத்தான்குளம், உடன்குடி யூனியன் பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் மழைநீர் சேமிப்பு மற்றும் குளங்கள், ஓடைகளை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஜல்சக்தி அபியான் திட்ட கண்காணிப்பாளர் பிரனாவ் குல்லர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அவர்கள் சாத்தான்குளம் யூனியன் கொம்மடிக்கோட்டை படுக்கப்பத்து கால்வாயில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட தடுப்பணை, நரையன்குடியிருப்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.2 லட்சம் செலவில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் குளம் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) விஜயகுமார், சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ஓடை தூர்வாரும் பணி
பின்னர் விளாத்திகுளம் கண்மாய் மறுகால் ஓடை தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். சின்னப்பன் எம்.எல்.ஏ., விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் தனசிங், யூனியன் ஆணையாளர் தங்கவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.