இரண்டாம் நிலை-சிறைக்காவலர், தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்துதேர்வு; இன்று நடக்கிறது

இரண்டாம்நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்துதேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-08-24 22:15 GMT
புதுக்கோட்டை,

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி தமிழக காவல்துறையில் 2019-20-ம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதும் உள்ள இரண்டாம்நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வினை புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 733 ஆண்கள், 1,175 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து விண்ணப்பதாரர்கள் எழுத உள்ளனர். இந்த எழுத்து தேர்விற்கான அழைப்பு கடிதங்கள் இணையதளம் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது.

சிறப்பு பஸ்கள்

இந்த தேர்விற்காக புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீபாரதி கல்வி நிறுவனம் மற்றும் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. எழுத்து தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்கள் நீல நிற அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா மற்றும் எழுத்துகள் எதுவும் இல்லாத பரீட்சை எழுதும் அட்டை ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

செல்போன், கால்குலேட்டர், பென்சில், ரப்பர் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்ற பொருட்கள் எதையும் கொண்டு வரக்கூடாது. விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளான இன்று காலை சரியாக 8.30 மணிக்கு தங்களது தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ள அறிவுரைகளை முழுமையாக படித்து தெரிந்து வரவேண்டும். இந்த தேர்வு மையங்களுக்கு புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இன்று காலை 7 மணி முதல் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்