தூத்துக்குடியில் இன்று 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு 9,599 பேர் எழுதுகிறார்கள்

தூத்துக்குடியில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 9 ஆயிரத்து 599 பேர் எழுதுகிறார்கள்.

Update: 2019-08-24 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 9 ஆயிரத்து 599 பேர் எழுதுகிறார்கள்.

காவலர் பணிக்கு எழுத்து தேர்வு

தமிழக காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை 2-ம் நிலை காவலர் பணிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வை தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 9 ஆயிரத்து 599 பேர் எழுதுகிறார்கள். தூத்துக்குடி மில்லர்புரம் பி.எம்.சி. பள்ளி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மில்லர்புரம் புனித மேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சுப்பையா வித்யாலயா பெண்கள் பள்ளி, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி, புனித மேரி மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வு பணியில், 8 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 31 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 116 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், அமைச்சு பணியாளர்கள் உள்பட 843 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் பேசியதாவது:-

அழைப்பு கடிதம்

2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் பங்கேற்க வரும் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் இருந்து நுழைவுச்சீட்டு எடுத்து நகலை கொண்டுவர வேண்டும். நகலில் புகைப்படம் இல்லாத விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக புகைப்படத்தை ஒட்டி அதன் மீது அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் கையெழுத்து பெற வேண்டும். எழுத்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் காலை 9 மணிக்கு முன்பு தங்களுக்கு உரிய தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வு மையத்துக்குள் செல்போன், கால்குலேட்டர் கொண்டுவர அனுமதி இல்லை. தேர்வுக்கு வரும்போது அழைப்பு கடிதம், நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா, தேர்வு அட்டை மற்றும் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்