தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல்: தூத்துக்குடியில் 2-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலையடுத்து தூத்துக்குடியில் 2-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலையடுத்து தூத்துக்குடியில் 2-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் ஊடுருவல்
இலங்கை, பாகிஸ்தானில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நேற்று 2-வது நாளாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி ரெயில் நிலையம், விமான நிலையங்களில் மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கடற்கரை பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
முக்கிய கோவில்கள், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். மேலும் போலீசார் பைனாகுலர் மூலம் கடல் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஏதேனும் படகு வருகிறதா? என்பதை கண்காணித்தனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார், கடற்கரையில் ரோந்து செல்லும் வாகனத்தில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.