திருப்பூர் மாவட்டம் முழுவதும் லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை

திருப்பூர் மாவட்டம் முழுவதும் லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-08-24 23:15 GMT
திருப்பூர்,

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருப்பதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக 6 பேர் கோவை மாவட்டத்துக்குள் 3 கார்களில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் ஊடுருவிய 3 கார்களின் பதிவு எண்ணை வைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புறநகரில் உள்ள 22 சோதனை சாவடிகள், மாநகரில் உள்ள 9 சோதனை சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் புறநகர் பகுதிகளில் போலீசார் உஷார் நிலையில் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையம், பஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள் ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் வாகன ரோந்துப்பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 2-வது நாளாக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வருகிறார்கள். அதுபோல் ரெயில்களில் ஏறி பயணிகளின் உடமைகளையும் வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் சோதனை செய்து வருகிறார்கள்.

இரவு நேரத்தில் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்து அங்கு தங்கியிருப்பவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். அதுபோல் பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆகியோரின் விவரங்களையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். மாநகரில் 8 நான்கு சக்கர வாகனங்கள், 15 இருசக்கர வாகனங்கள் மூலம் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் கூறும்போது, மாநகர் முழுவதும் 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தொடர்ந்து ரோந்துப்பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தனியாக போலீசார் நியமிக்கப்பட்டு தேடுதல் பணியில் தொடர்கிறது. இரவு நேரங்களில் சந்தேகத்துக்கு இடமான பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்படுகிறது என்றார்.

மேலும் செய்திகள்