பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை

பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர் கர்ணமகாராஜனுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு நடவடிக்கை எடுத்துள்ளது.;

Update: 2019-08-24 23:45 GMT
மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சினிமா மற்றும் எலெக்ட்ரானிக் மீடியா கல்வித்துறை தலைவராக இருந்தவர் பேராசிரியர் கர்ணமகாராஜன் (வயது 47). அவரிடம் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவி பி.எச்டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். அந்த மாணவிக்கு கர்ணமகாராஜன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மாணவி முழு நேர பி.எச்டி. படிப்புக்கு முறையாக வருவதில்லை என்றும், வருகைப்பதிவேட்டில் திருத்தம் செய்தது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டார், அதனை கண்டித்ததால் தன் மீது மாணவி பொய்யாக பாலியல் புகார் அளித்தார் என பேராசிரியர் கர்ணமகாராஜன் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு தரப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர், விசாரணை நடத்தி பாலியல் புகாரில் உண்மை இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதனை தொடர்ந்து பேராசிரியர் கர்ணமகாராஜனுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்குவது என்று கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடந்த ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த ஜூன் மாதம் அவருக்கு ஆட்சிமன்றக்குழு நோட்டீசு அனுப்பியது. இதனை எதிர்த்து அவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு குறித்து பதில் அளிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு, ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், மீண்டும் நடந்த ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில், ஆட்சிமன்றக்குழு வழங்கிய நோட்டீசுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எந்த பதிலும் அளிக்காததால் பேராசிரியர் கர்ணமகாராஜனுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவின் நகலை பதிவாளர் அலுவலகம் அனுப்பியது. அதனை அவர் பெற்றுக்கொண்டார். இந்த நடவடிக்கை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்