பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை எதிரொலி, மணமேல்குடி கடற்கரை பகுதியில் படகு மூலம் தீவிர ரோந்து பணி
பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக மணமேல்குடி கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணமேல்குடி,
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், ராஜ்குமார் மற்றும் போலீசார் கண்டனிவயல் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது போலீசார் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்து, அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னரே அனுமதித்தனர். மேலும் மணமேல்குடி கோடியக்கரையில் கடற்கரை பகுதியில் ரோந்து படகின் மூலம் கடலில் ரோந்து சென்றனர். அப்போது மீனவர்களிடம் சந்தேகப்படும் வகையிலான நபர்களோ? பொருட்களோ? தென்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனக்கூறினர்.
இதேபோல் மீனவ கிராமங்களான புதுக்குடி, பொன்னகரம், அந்தோணியார்புரம், வடக்கம்மாபட்டினம், மேலஸ்தானம் ஆகிய பகுதிகளுக்கு சென்று, அங்கிருந்த பொது மக்களிடம் சந்தேகப்படியான நபர்களை கண்டால் உடனடியாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என கூறினார்கள். அதுமட்டுமின்றி போலீசார் ரோந்து ஜீப் மூலம் கடற்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கோட்டைபட்டினம் கடற்கரையில் போலீசார் படகுமூலம் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.