நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல், 2 மாதத்துக்கு முன்பே திட்டமிட்டது அம்பலம் - போலீஸ் விசாரணையில் புதிய தகவல்கள்

நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்யப்பட்ட சம்பவத்தில் 2 மாதத்துக்கு முன்பே போலி முகவரியில் சிம் கார்டுகள் வாங்கி மோசடிக்கு திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-;

Update: 2019-08-23 22:45 GMT
தேனி,

தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன. இந்த நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. அந்த கடன் தொகை பல தவணைகளாக வட்டியுடன் திரும்ப வசூல் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் தேனி அருகே ஆதிப்பட்டி சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்த அருண்பாபு (வயது 37) என்பவர் தேனி மாவட்டத்துக்கான மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். தேனி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் இருந்து களப் பணியாளர்கள் வசூல் செய்து கொடுக்கும் பணத்தை நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு வங்கி மூலம் அனுப்பி வைக்கும் பணியை இவர் செய்து வந்தார். இந்நிலையில் இவர், வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த ரூ.1 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரத்து 863 தொகையை நிறுவனத்துக்கு செலுத்தாமல் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் மோகன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாபுவை தேடி வருகின்றனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-பணத்தை கையாடல் செய்த அருண்பாபு இதுகுறித்து 2 மாதத்துக்கு முன்பே திட்டமிட்டு செயல்பட்டுள்ளார். இதற்காக அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆண்ட்ராய்டு வசதி எதுவும் இல்லாத 3 சாதாரண செல்போன்கள் வாங்கியுள்ளார். அதில் பயன்படுத்த புதிய சிம்கார்டுகள் வாங்கியுள்ளார். ஆனால், அந்த சிம்கார்டுகள் அவரின் பெயரில் இல்லை. போலியான முகவரியை கொடுத்து சிம் கார்டுகள் வாங்கி இருப்பதாக தெரியவருகிறது. முதலில் களப்பணியாளர்கள் 2 பேர் கொடுத்த பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் இருந்துள்ளார். பின்னர், அவரே நேரடியாக சென்று வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூலித்து அதை கையாடல் செய்து தலைமறைவாகி விட்டார். அப்படி தலைமறைவாகும் போது அதுவரை பயன்படுத்திய செல்போன்களை தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை. இதனால், அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டு பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சில ரகசிய தகவல்களின் பேரில் அவருக்கு நெருக்கமான சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்