அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்
குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு மருத்துவமனையில் அவுட்சோர்சிங்க் பிரிவில் செக்யூரிட்டி மற்றும் பணியாளர்கள் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், பொருளாளர் பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், ராமச்சந்திரன், சங்க செயலாளர் சந்திரமோகன், பொருளாளர்கள் மணிமதி, ஜெயசுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
2013-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி ஒப்பந்த பணியில் சேர்ந்த செக்யூரிட்டிகளுக்கு மாதம் ரூ.7,400 மற்றும் பணியாளர்களுக்கு ரூ.6,400 வழங்கப்படுகிறது. இவர் களுக்கு குறைந்தப்பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.
சம்பள பில் மற்றும் வார விடுமுறை வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.