திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் இடையூறாக இருந்த மதுக்கடை மூடப்பட்டது: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் இடையூறாக இருந்த மதுக்கடை மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2019-08-23 21:30 GMT
திருவெண்காடு, 

திருவெண்காடு அருகே மங்கைமடம் கடைத்தெருவில் மதுக்கடை இருந்தது. இந்த மதுக்கடை மங்கைமடம்-திருநகரி சாலையில் இயங்கி வந்ததால், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. மேலும், இந்த கடைக்கு மதுகுடிப்பவர்கள் அதிக அளவில் வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று மங்கைமடம் பகுதி பொதுமக்கள், பல்வேறு சமூக அமைப்பினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் பாரதி எம்.எல்.ஏ. மற்றும் திருவெண்காடு போலீஸ் நிலையத்திலும் மனு கொடுத்தனர்.

இதுதொடர்பாக எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் பழனிசாமி மற்றும் உயர் அதிகாரிகளிடம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் உத்தரவின்படி திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ், கடந்த வாரம் மங்கைமடம் மதுக்கடையை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மதுக்கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், இதனால் அடிக்கடி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், அந்த மதுக்கடையை அகற்றுவது அவசியம் எனவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

இதனை தொடர்ந்து அதிகாரிகளின் உத்தரவின்படி நேற்று முதல் மங்கைமடத்தில் இருந்த மதுக்கடை மூடப்பட்டது. இதனால் அந்தபகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கடையை மூடுவதற்கு ஏற்பாடு செய்த பாரதி எம்.எல்.ஏ., போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் மற்றும் சமூகசேவை அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.

மதுக்கடை மூடப்பட்டதற்கு இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேஷ் தலைமையில் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், நாகை மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மேலும் செய்திகள்