வேதாரண்யம் அருகே சாமி சிலைகள் கொள்ளை: மேலும் 2 பேர் கைது - 2 சிலைகள், வெள்ளி கிரீடம் மீட்பு

வேதாரண்யம் அருகே சாமி சிலைகள் கொள்ளை போன வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 2 சிலைகள், வெள்ளி கிரீடத்தை மீட்டனர்.

Update: 2019-08-23 22:30 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கோடியம்மன் கோவிலில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட அம்மன சிலை, சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய 4 சிலைகள் மற்றும் அம்மன் தலையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி கிரீடம் ஆகியவை கடந்த 14-ந்தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு மற்றும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) திருமேனி ஆகியோரின் உத்தரவின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுபாஷ்சந்திரபோஸ், சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சாமி சிலைகள் கொள்ளை தொடர்பாக மறைஞாயநல்லூரை சேர்ந்த சந்திரவேலு மகன் உதயராஜன்(வயது30), அதே ஊரை சேர்ந்த சுப்பையன் மகன் லோகேஸ்வரன்(20), வேளாங்கண்ணி அருகே சின்னதும்பூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சதாசிவம்(30) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருக்குவளை பகுதியில் உள்ள ராமன் கோட்டம் ஏர்வகாடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் உதயகுமார் என்பவர் வீட்டில் மண்ணில் புதைத்து வைத்திருந்த வள்ளி, தெய்வானை ஆகிய 2 சிலைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செயதனர். மீதி உள்ள 2 சிலைகள், வெள்ளி கிரீடம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக ராமன்கோட்டம் ஏர்வகாட்டை சேர்ந்த திருஞானம் மகன் பாண்டியன்(24), மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருபாகரன்(20) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் படி உதயகுமார் வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்திருந்த சுப்பிரமணியர் சிலை, அம்மன் சிலை மற்றும் வெள்ளி கிரீடம் ஆகியவற்றை மீட்டனர். இதை தொடர்ந்து கிருபாகரன், பாண்டியன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய உதயகுமாரை தேடி வருகின்றனர். சாமி சிலைகளை கொள்ளையடித்தவர்கை-ளை கைது செய்த தனிப்படை போலீசாரை திருச்சி மண்டல ஐ.ஜி. வரதராஜுலு பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

மேலும் செய்திகள்