ராமேசுவரம் கோதண்டராமர் கோவிலில் சாமி சிலையை கொள்ளையடிக்க முயற்சி; உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச் சென்ற கும்பலுக்கு வலைவீச்சு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலோடு சேர்ந்த தனுஷ்கோடி சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் சாமி சிலையை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. அதே நேரத்தில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளிச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2019-08-23 23:00 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் தனுஷ்கோடி செல்லும் சாலை அருகே கடலின் நடுவே உள்ளது, கோதண்டராமர் கோவில். இந்த கோவில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலோடு சேர்ந்த உபகோவிலாகும். இந்த நிலையில் கோதண்ட ராமர் கோவிலை திறந்து பூஜைகள் செய்வதற்காக அர்ச்சகர்கள் வெங்கட்ராமன், வெங்கடேஷ் ஆகிய 2 பேரும் நேற்று காலை 6 மணிக்கு சென்றுள்ளனர்.

அப்போது கோவிலின் நுழைவு வாசல் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த 2 பேரும் உடனடியாக ராமேசுவரம் கோவில் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதை தொடர்ந்து தனுஷ்கோடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரத்னவேல் தலைமையில் போலீசாரும், கோவில் மேலாளர் முருகேசன், சூப்பிரண்டு ககாரின்ராஜ், பேஷ்கார்கள் அண்ணாதுரை, செல்லம் உள்ளிட்டோரும் விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டனர்.

அங்கு கோவிலின் நுழைவு வாசல் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. உள்ளே உண்டியலின் பூட்டை உடைத்து, அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் சாமி கற்சிலைகளையும் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.

ஆனால் சிலைகளை எடுக்க முடியாததால் வெளியே வந்த கொள்ளையர்கள், கோவிலின் எதிரே இருந்த கடைகளின் பூட்டை உடைத்து அங்கு இருந்த பொருட்களை வெளியே வீசி பணம் உள்ளதா? என தேடிப்பார்த்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளை நடந்த கோவிலில் நேற்று காலையில் பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. காலை 10.30 மணிக்கு கோடி தீர்த்தத்தால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 11 மணிக்கு பிறகு வழக்கம் போல் பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து கோவில் மேலாளர் முருகேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனுஷ்கோடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோதண்டராமர் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகள் ராமேசுவரம் கோவிலின் கருவூல பாதுகாப்பில் உள்ளதால் அந்த சிலைகள் தப்பின. கோவில் சிலையை கொள்ளையடிக்க முயற்சித்ததுடன், உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்