நாகர்கோவிலில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்; சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்

நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2019-08-23 22:15 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவில் மாநகரின் 52 வார்டுகளிலும் சாலைகளை செப்பனிடக்கோரி குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. மகளிரணி சார்பில் நாகர்கோவில் வடசேரி சி.பி.எச்.ரோடு அருணாங்குளம் சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு குமரி கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெசிந்தா தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் மீது அக்கறை உள்ள இயக்கமாக தி.மு.க. எப்போதுமே இருந்து வருகிறது. அதனால்தான் சாலைகளை சீரமைக்கக்கோரி இதுபோன்ற போராட்டங்களை தி.மு.க. நடத்துகிறது. நாகர்கோவில் நகரில் 52 வார்டுகளிலும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. குப்பைகள் அகற்றப்படாமல் கிடக்கிறது. குடிநீர் குழாய்களும் சீரமைக்கப்படவில்லை. பலமுறை இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆழ்குழாய் கிணறுகள் பழுதடைந்து உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறையும் அதிகரித்து உள்ளது.

நான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் மக்கள் பணியாற்ற வேண்டியது எனது கடமை. தி.மு.க. சார்பில் தற்போது நடத்தப்படும் போராட்டங்கள் தனிப்பட்ட முறையிலான போராட்டங்கள் அல்ல. மக்களுக்காக நடத்தப்படும் போராட்டமாகும். பொதுமக்களுக்கான அடிப்படை வசதி பணிகளை மாநகராட்சி நிர்வாகம் சரிவர நிறைவேற்றாததால் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். ஒரு மணி நேரம் போராட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்று விடுவார்கள் என்று அதிகாரிகள் நினைக்க வேண்டாம். எங்களது இந்த போராட்டங்களுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் நகர தி.மு.க. சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அதற்கும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மாவட்ட அளவில் மறியல் என போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. இரா.பெர்னார்டு, முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், நிர்வாகிகள் தில்லைச் செல்வம், தாமரை பாரதி, மதியழகன், உதயகுமார், குட்டி ராஜன், பசலியான், சிவராஜன், பன்னீர்செல்வம், எம்.ஜே.ராஜன், அசோகன், கோபி, சாகுல்ஹமீது, கவுசல்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்