பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல்: திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் வந்ததையடுத்து திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கோவையில் இருந்து வந்த ரெயிலில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

Update: 2019-08-23 22:00 GMT
திருச்சி

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர் குலைக்க பயங்கரவாத அமைப்புகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாகவும், பயங் கரவாதிகள் 6 பேர் ஊடுருவி, அவர்கள் கோவையில் பதுங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதை யடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. திருச்சியிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனை சாவடிகளில் வாகனங்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்து அனுப்பினர். இந்த நிலையில் நேற்றும் சோதனை தொடர்ந்தது. மத்திய, சத்திரம் பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு அதி கரிக்கப்பட்டிருந்தது. குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை உளவுப்பிரிவு, நுண்ணறிவு பிரிவு, புலனாய்வு பிரிவு போலீசார் கண் காணித்து வருகின்றனர். திருச்சியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே 2 முறை வந்து சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் அவர் களுக்கு ஆதரவாக யாரேனும் உள்ளனரா? வெளியில் இருந்து யாரேனும் வந்து பதுங்கி உள்ளனரா? என போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகள் ஊடுருவலை தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அனுப்புகின்றனர்.

கோவையில் இருந்து திருச்சி வந்த ரெயில்களில் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தினர். கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய முதலாவது நடைமேடைக்கு வந்தது. அந்த ரெயிலில் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை செய்தனர். சந்தேகப்படும்படி மர்மநபர்கள் யாரேனும் உள்ளனரா? எனவும் மர்ம பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என சோதனையிட்டனர். இதேபோல கோவை மார்க்கத்தில் இருந்து வந்த ரெயில்களில் போலீசார் பலத்த சோதனையிட்டனர்.

கோவையில் போலீசாரின் சோதனை அதிகப்படியாக இருந்ததால் அங்கிருந்து பயங்கரவாதிகள் ரெயில் மூலம் தப்பி செல்ல வாய்ப்பிருக்கலாம் என்பதால் கோவையில் இருந்து வரும் ரெயில்களை பலத்த சோதனையிட ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதேபோல திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி விமானநிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை யினர் தீவிர சோதனை செய்து விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். மேலும் விமானநிலைய வளாகத்தில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்கர் கருவி உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். விமானநிலையத்திற்குள் வரும் வாகனங் களும் நுழைவு வாயிலில் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்