பிரதம மந்திரி விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
பிரதம மந்திரி விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் சேர வேலூர் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.;
வேலூர்,
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை உயர்த்திட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் வயது முதிர்வின்போது அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். அத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கான பொருளாதார முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய அரசு பிரதம மந்திரி விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.
இந்த ஓய்வூதிய திட்டம் 18 முதல் 40 வயது வரை உள்ள 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு பொருந்தும்.
விவசாயிகளின் வயதிற்கேற்ப ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை 60 வயதை அடையும் வரை செலுத்த வேண்டும். அந்தத்தொகைக்கு நிகரான தொகையை அரசும் அவர்களின் கணக்கில் செலுத்தும்.
61 வயது முதல் மாதத்தில் இருந்து இந்த கணக்கில் இருந்து ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பணம் செலுத்துபவர் எதிர்பாராதவிதமாக இறந்து போனால் வாரிசுதாரர்களுக்கு தொடர்ந்து மாதம் ரூ.1,500 ஓய்வூதியமாக வழங்கப்படும். விவசாயிகள் 5 ஆண்டுகளுக்கு பின்னர் இத்திட்டத்தில் தொடர விருப்பம் இல்லையென்றால் கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்ப பெற வழிவகை உள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் பெயரில் நிலம் இருந்தும் 40 வயதை கடந்திருந்தால் தனது குடும்பத்தில் உள்ள மனைவி, மகன், மகள் இத்திட்டத்தில் இணையலாம்.
இந்த திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் அருகேயுள்ள பொது சேவை மையத்தில் இணையதளத்தின் மூலம் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். விவசாயி மற்றும் மனைவியின் பெயர், ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், பிரதம மந்திரி கிசான் சமன் நிதி திட்டத்தில் பயனாளியாக இருப்பின் அதற்கான வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் மூலம் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைந்ததற்கான ஓய்வூதிய அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
தேசிய ஓய்வூதிய திட்டம், தொழிலாளர் மாநில காப்பீட்டு கழக திட்டம் மற்றும் தொழிலாளர் நிதி நிறுவன திட்டத்தில் பயன்பெறுபவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது. மேலும் மாதம் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தில் பங்குபெற இயலாது. பிரதம மந்திரி விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.