என்ஜினீயர் சாவில் திடீர் திருப்பம்: ஓரின சேர்க்கை விவகாரத்தில் விஷம் குடித்தது அம்பலம் - நண்பர் கைது
ராஜாக்கமங்கலம் அருகே என்ஜினீயர் சாவில் திடீர் திருப்பமாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். ஓரின சேர்க்கை விவகாரத்தில் என்ஜினீயர் உயிரை மாய்த்த சோக சம்பவம் அம்பலமாகி உள்ளது.
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருகே சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25), டிப்ளமோ என்ஜினீயர். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலையில் கொத்தனாருக்கு உதவியாளராக சென்று வந்தார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மணிகண்டன் தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட் டது. அதாவது, மணிகண்டனின் மோட்டார் சைக்கிளை அவருடைய குடும்பத்தினர் சோதனை செய்துள்ளனர். அப்போது, மணிகண்டன் எழுதிய கடிதம் மற்றும் ஒரு மெமரி கார்டு இருந்துள்ளது.
அந்த கடிதத்தில், அவருடைய நண்பரான ஈத்தங்காடை சேர்ந்த மகேஷ் (26) என்பவருடன் தவறான பழக்கம் இருந்ததாகவும், அதுதொடர்பான மன உளைச்சலில் தற்கொலை செய்ய போவதாகவும் எழுதி இருந்ததாக தெரிகிறது. மகனின் சாவுக்கு அவனுடன் நெருங்கி பழகிய நண்பர் தான் காரணம் என்று தெரிந்ததும் மணிகண்டனின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
பின்னர் அந்த கடிதம், மெமரி கார்டை மணிகண்டனின் குடும்பத்தினர் போலீசாரிடம் சென்று ஒப்படைத்ததாக தெரிகிறது.
இதனையடுத்து போலீசார் மகேசை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மணிகண்டனும், மகேசும் ஒரே கல்லூரியில் டிப்ளமோ படித்தவர்கள் என்பதும், இருவரும் ஓசூருக்கு சென்று ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததும், அங்கு போதிய சம்பளம் கிடைக்காததால் அவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.
தொடர்ந்து மணிகண்டன், கட்டிட வேலைக்கும், மகேஷ் எலக்ட்ரீஷியன் வேலைக்கும் சென்று வந்தனர். இதற்கிடையே இருவரும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மகேசுக்கு திருமண ஏற்பாடு நடந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து மகேஷ், மணிகண்டனிடம் இருந்த தொடர்பை விட முயன்றுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர். ஓரின சேர்க்கை விவகாரத்தில் என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.