அரக்கோணம் அருகே, மினிவேன் கவிழ்ந்து சிறுவன் பலி; 5 பேர் காயம்
அரக்கோணம் அருகே மினிவேன் கவிழ்ந்து சிறுவன் பலியானான். 5 பேர் காயமடைந்தனர். துக்க வீட்டுக்கு வந்த இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
அரக்கோணம், -
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த ராமாபுரம் கிராமத்தில் பச்சையம்மாள் (வயது 80) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அவருடைய துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து உறவினர்கள் சிலர் நேற்று மாலை மினிவேனில் ராமாபுரம் கிராமத்துக்கு வந்தனர். வேனை டிரைவர் சேதுராமன் (46) என்பவர் ஓட்டிவந்திருந்தார். வேனில் வந்தவர்கள் அதில் இருந்து இறங்கியதும், டிரைவர் வேனை ஒரு ஓரமாக நிறுத்தினார்.
அப்போது அந்தப்பகுதியில் சிறுவர்கள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் வேன் டிரைவர் சேதுராமனிடம் சென்று தங்களை வேனில் ஏற்றி சிறிது தூரம் ஓட்டிச்செல்லுமாறு கூறினர். சிறுவர்கள் ஆசைப்பட்டதால் அவர்களை வேனில் ஏற்றிக்கொண்டு மாதிமங்கலம் நோக்கி டிரைவர் ஓட்டிச்சென்றார்.
அங்குள்ள ஒரு வளைவில் சென்றபோது எதிரே லாரி வந்தது. இந்த லாரிக்கு வழிவிடுவதற்காக டிரைவர் சேதுராமன் வேனை திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் டிரைவர் சேதுராமன், வேனில் இருந்த சக்தி (11), திவாகர் (13), மற்றொரு திவாகர் (7), மகேஷ் (13), மேனகா (10) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற சிறிதுநேரத்தில் சிறுவன் சக்தி இறந்துவிட்டான். மற்றவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். துக்கவீட்டுக்கு வந்த இடத்தில் நடந்த இந்த விபத்து பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.