கோவையில், மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி

கோவையில் மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலியானாள்.

Update: 2019-08-23 22:15 GMT
கோவை,

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுஜித்கோரா. இவர் கோவை ரெங்கே கவுடர் வீதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகள் சினேகா (வயது 7). இவள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுமி சினேகா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். உடனே அவளை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பெற்றோர் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை.

அத்துடன் சிறுமிக்கு பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தியதில் அவளுக்கு என்ன காய்ச்சல் என்றே தெரியவில்லை. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த அவள் மிகவும் அவதிப்பட்டு வந்தாள். இதற்கிடையே நேற்று முன்தினம் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அங்குள்ள டாக்டர்கள் சினேகாவை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சினேகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சிறுமியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இது அங்கு இருந்தவர்களை கண்கலங்க செய்தது. இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்