நடப்பு ஆண்டில் 434 பசுமைவீடுகள் கட்டப்படுகின்றன கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 434 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருவதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 434 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருவதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பசுமை வீடுகள்
தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பசுமை வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 300 சதுர அடி பரப்பில் வீடு கட்டிக் கொள்ளலாம். வீடு கட்டுவதற்கு ரூ.1.80 லட்சம் மற்றும் சூரிய மின்சக்தி விளக்குகள் அமைக்க ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது. சுகாதாரத்தை பேணிகாக்கும் வகையில் முதல்-அமைச்சர் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீட்டில் கழிவறை அமைக்க ரூ.12 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
434 வீடுகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டு 523 வீடுகளும், 2017-18-ம் ஆண்டில் 425 வீடுகளும், 2018-19-ம் ஆண்டில் 207 வீடுகளும் ஆக மொத்தம் 1,155 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் குடியிருந்து வருகின்றனர். 2019-20-ம் ஆண்டில் 434 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஏழை எளிய மக்கள் பசுமை வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.