கயத்தாறில் கோவிலில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

கயத்தாறில் கோவிலில் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-23 22:00 GMT
கயத்தாறு, 

கயத்தாறில் கோவிலில் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவிலில் நகை-பணம் திருட்டு

கயத்தாறு-கடம்பூர் மெயின் ரோட்டில் சிவனணைந்த பெருமாள் சுடலை சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வாரம் கோவில் கொடை விழா நடந்தது. தொடர்ந்து நேற்று 8-ம் நாள் கொடை விழா நடந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த கோவிலுக்கு சென்ற மர்மநபர்கள், கோவிலின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள், கோவிலில் உள்ள பூஜை பொருட்கள் வைக்கும் அறை கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர்.

பின்னர் அவர்கள், அங்குள்ள பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த ஒரு பவுன் தங்க கண்மலர் மற்றும் ரூ.9 ஆயிரத்தை திருடினர். மேலும் அவர்கள், கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலின் பூட்டை உடைத்து திறந்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

போலீஸ் வலைவீச்சு

நேற்று காலையில் 8-ம் நாள் கொடை விழாவை முன்னிட்டு, கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள், கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகை-பணம் திருட்டு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்