கார் விற்பனை சரிவு: தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் அரசு கவனமுடன் செயல்படுகிறது அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி

“கார் விற்பனை சரிவால், கார் உற்பத்தி தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் அரசு கவனமுடன் செயல்படுகிறது“ என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.;

Update: 2019-08-23 22:30 GMT
திருச்செந்தூர், 

“கார் விற்பனை சரிவால், கார் உற்பத்தி தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் அரசு கவனமுடன் செயல்படுகிறது“ என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று மாலையில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பி.எஸ்.-5 என்ஜினுக்கு மாற்றாக பி.எஸ்.-6 என்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்களையே விரைவில் இயக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக மின்சார கார்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வங்கிகளிலும் கடன் வழங்கும் திறன் குறைந்து உள்ளது.

சென்னை, மும்பை உள்ளிட்ட 25 பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மெட்ரோ ரெயில்களில் தினமும் 2 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு போக்குவரத்து வசதி உள்ளது. இதனால் கார்களில் சென்றவர்களும்கூட மெட்ரோ ரெயில் சேவையை பெரிதும் பயன்படுத்துகின்றனர். இதனால் கார்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டு உள்ளது.

அரசு கவனமுடன் செயல்பட்டு...

கார் விற்பனை சரிவால், கார் உற்பத்தி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் பாதிக்காத வகையில், அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது தொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மீண்டும் ஒரு முறை ஆலோசனை கூட்டம் நடத்தி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை மேற்கொள்வார். கார் விற்பனையில் மந்தமான நிலை 3 மாதம் முதல் 6 மாதங்களில் சீராகி விடும். விரைவில் நல்ல சூழ்நிலை உருவாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்