அமராவதி பண்ணையில் காயம் அடைந்த முதலைக்கு சிகிச்சை; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

அமராவதி முதலைப்பண்ணையில் காயம் அடைந்த முதலையை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-08-23 23:00 GMT
தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி அணை அருகே முதலைப்பண்ணை உள்ளது. வனத்துறையின் பராமரிப்பில் உள்ள இந்த பண்ணையில் 12 தொட்டிகளில் பெண் முதலைகள் உள்பட 103 நன்னீர் முதலைகள் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. இங்குள்ள முதலைகளுக்கு தினந்தோறும் மீன் மற்றும் மாட்டிறைச்சி உணவாக வழங்கப்படுகிறது.

ஆனால் முதலைகளுக்கு உணவு வழங்குவதில் வனத்துறையினர் பாரபட்சமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் முதலைகள் சோர்வு அடைவதுடன் அவற்றிக்குள் உணவு பங்கீட்டில் சண்டை நடந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

அமராவதி அருகே வனத்துறையால் பராமரிக்கப்படும் முதலைப்பண்ணை உள்ளது. இங்குள்ள முதலைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் சராசரியாக ஒரு முதலைக்கு எந்த நேரத்தில் எந்த அளவில் உணவு வழங்கப்படுகிறது என்பது மட்டும் இன்று வரையிலும் மர்மமாகவே உள்ளது.

அதுமட்டுமின்றி முதலைகளுக்கு வழங்கப்படுகின்ற உணவில் பற்றாக்குறை ஏற்படுவதாக தெரிகிறது. இதனால் அவை நடக்க முடியாமல் சோர்வடைந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி உணவளிக்கும் போது முதலைகளுக்குள் சண்டை ஏற்பட்டு அவை காயமடைந்தும் விடுகிறது.

அதை தண்ணீர் தொட்டி இல்லாத பகுதியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்காமல் பெயரளவிற்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இதனால் முதலை அடிக்கடி தண்ணீருக்குள் சென்று விடுவதால் அதற்கு காயம் குணமடையாமல் அதன் உயிருக்கு ஆபத்து நேரிடும் சூழல் நிலவுகிறது.

அத்துடன் முதலை தொட்டிகளில் உள்ள தண்ணீரை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றுவதற்கும் வனத்துறையினர் தவறி விடுகின்றனர். இதனால் முதலை தொட்டிகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அங்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகளின் வரத்தும் குறைந்து கொண்டே வருகின்றது.

மேலும் முதலைப்பண்ணையில் உள்ள பெண் முதலைகள் இனப்பெருக்க காலங்களில் முட்டைகளை இட்டு குஞ்சு பொரித்து வருகின்றன. அதன் பின்பாக முதலைகுட்டிகள் ஒரு சில மாதங்களில் ரகசியமான முறையில் அமராவதி ஆறு மற்றும் அணைப்பகுதிக்கு இடம் பெயர்ந்து விடுகின்றன. அவை எந்த விதத்தில் இடம் பெயர்கின்றன? யாராவது கொண்டு சென்று அங்கு விடுகின்றனரா? என்ற சந்தேகம் நீண்ட காலமாக பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

மேலும் முதலைப்பண்ணையில் இருந்து இடம் பெயர்ந்த முதலைகளுக்கு வறட்சி காலங்களில் போதிய அளவு உணவும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக அவை உணவை தேடிக்கொண்டு கரையோர கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் அங்கு வசித்து வருகின்ற பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் முதலைப்பண்ணையில் முதலைகளுக்கு உணவளிப்பதை கண்காணிப்பதற்காகவும், அவை பராமரிக்கப்படுவதை தெரிந்துகொள்வதற்காகவும் அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் முதலைப்பண்ணையில் உள்ள தொட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அங்கு நடைபெறுகின்ற அன்றாட நிகழ்வுகளை கண்காணிப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இதனால் முதலைகளுக்கு உணவளிப்பதில் நீடித்து வருகின்ற சந்தேகமும், அவை முறையற்ற வகையில் இடம் பெயரும், மர்மமும் விலகும். அத்துடன் உணவுப்பற்றாக்குறையால் முதலைகளும் சோர்வடையாமல் ஆரோக்கியத்தோடு இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்