2-வது நாளாக இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்: தேனி மாவட்டத்தை சேர்ந்த 3,250 இளைஞர்கள் பங்கேற்பு

ஈரோட்டில் 2-வது நாளாக நடந்த இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாமில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 250 இளைஞர்கள் பங்கேற்றனர்.

Update: 2019-08-23 23:00 GMT
ஈரோடு,

இந்திய ராணுவத்தில் சோல்ஜர், சோல்ஜர் டெக்னிக்கல், அம்யூனிசன், ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் கிளர்க், ஸ்டோர் கீப்பர், சோல்ஜர் டிரேட்ஸ்மென் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய, ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் முகாம் தொடங்கியது. முகாமின் முதல் நாளில் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த, 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். நேற்று தொடர்ந்து 2-வது நாளாக முகாம் நடந்தது. இந்த முகாமில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 250 இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நுழைவு சீட்டு வைத்திருந்த இளைஞர்களை மட்டும் ராணுவ அதிகாரிகள் முகாமுக்குள் அனுமதித்தனர்.

அதைத்தொடர்ந்து இளைஞர்களுக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் தலா 300 பேர் வீதம் ஓடினார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக மார்பு, உயரம், உடல் தகுதி, பார் எடுத்தல், ‘எஸ்‘ வடிவ ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வான சிலர் தவிர மற்றவர்கள் வெறியேற்றப்பட்டனர். இறுதியில் பல்வேறு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தேர்வானவர்களுக்கு வருகிற அக்டோபர் மாதம் 27-ந்தேதி நடைபெற உள்ள எழுத்து தேர்வுக்கான நுழைவு சீட்டை ராணுவ அதிகரிகள் வழங்கினார்கள். தொடர்ந்து ஈரோடு, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், மதுரை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு வருகிற 2-ந் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்