தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: ஈரோடு மாவட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான 100 பேர் பிடிபட்டனர்

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி சந்தேகத்துக்கு இடமான 100 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சத்தி-பண்ணாரி சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-08-23 23:15 GMT
ஈரோடு,

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்துக்கு ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் போலீசார் தீவிர விழிப்புடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. தீவிரவாதிகள் கோவையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் இருப்பதால் கோவையில் இருந்து வரும் வாகனங்கள், கோவைக்கு செல்லும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டன.

மேலும், பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்பட பல்வேறு இடங்களிலும் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதுபற்றி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் அதிகரிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் கவனமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். தற்போதைய நிலமையை தீவிரமாக கண்காணித்துக்கொண்டே இருக்கிறோம். கடந்த 4 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 2 ஆயிரத்துக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் இ-சலான் கருவி மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை நடத்திய சோதனையில் 80 பேர் சந்தேகத்துக்கு இடமாக பிடிபட்டனர். அவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். இதுபோல் நேற்று பிற்பகல் வரை 20 பேர் சந்தேகத்துக்கு இடமாக பிடிபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை 100 பேர் சந்தேகத்துக்கு இடமாக பிடிபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து சத்தியமங்கலம், திம்பம், தாளவாடி, ஆசனூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதனால் தீவிரவாதிகள் இந்த வழியாக பக்கத்து மாநிலத்துக்கு சென்று விடக்கூடும் என்பதால் நேற்று முன்தினம் இரவு முதலே சத்தியமங்கலத்தில் உள்ள 3 சோதனை சாவடிகள் மற்றும் தாளவாடி அடுத்து மலைமேல் உள்ள ஆசனூர் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சத்திமங்கலம், ஆசனூர் சோதனை சாவடிகள் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ளதால் இந்த வழியாக வரும் ஒவ்வொரு வாகனமும் நிறுத்தி தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. பயணம் செய்கிறவர்களில் யாராவது சந்தேகத்துக்கு இடமாக தெரிந்தால் அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திய பின்னரே அவர்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்கிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் கண்காணிக்கப்படுகின்றன. சந்தேகப்படும் வகையில் மர்ம நபர்கள் யாராவது உங்கள் பகுதியில் சுற்றித்திரிந்தால் தகவல் தெரிவிக்கவும் என்று போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்