கள்ளக்காதலியை கொன்று உடலை சாலையில் வீசிய தொழிலாளி கைது கொலையை மறைக்க உதவிய மருமகனும் சிக்கினார்
மலவள்ளி அருகே, கள்ளக்காதலியை கொன்று உடலை சாலையில் வீசிய தொழிலாளியும், கொலையை மறைக்க தொழிலாளிக்கு உதவிய அவருடைய மருமகனும் போலீசில் சிக்கி உள்ளனர்.
ஹலகூர்,
மலவள்ளி அருகே, கள்ளக்காதலியை கொன்று உடலை சாலையில் வீசிய தொழிலாளியும், கொலையை மறைக்க தொழிலாளிக்கு உதவிய அவருடைய மருமகனும் போலீசில் சிக்கி உள்ளனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தூரத்து உறவினருடன் பழக்கம்
மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா தொட்டபாகிலு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜய்யா. இவருடைய மனைவி பிரேமகுமாரி(வயது 40). கூலித்தொழிலாளியான ராஜய்யாவுக்கும், பிரேமகுமாரிக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவனும், மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜய்யாவுக்கும், பிரேமகுமாரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து பிரேம குமாரி தனது கணவரை விட்டு பிரிந்து வந்து தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சந்தர்ப்பத்தில் பிரேம குமாரிக்கும், மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா நரேக்கியாதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியான மகாதேவசெட்டி(50) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மகாதேவசெட்டி, பிரேமகுமாரிக்கு தூரத்து உறவினர் ஆவார். மேலும் அவருக்கு திருமணமாகி மனைவி, மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.
கள்ளக்காதல்
இந்த நிலையில் பிரேம குமாரிக்கும், மகாதேவசெட்டிக்குமான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி மகாதேவசெட்டி தனது கள்ளக்காதலி பிரேமகுமாரியை அழைத்துக் கொண்டு மண்டியா மாவட்டம் மலவள்ளி அருகே உள்ள பூரிகாலி கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மகாதேவசெட்டி, தனது கள்ளக்காதலி பிரேமகுமாரியை சரமாரியாக அடித்து, உதைத்து தாக்கி உள்ளார். மேலும் கடும் கோபமடைந்த அவர், பிரேம குமாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதையடுத்து அவர் பிரேம குமாரியின் உடலை அந்த அறையிலேயே வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்துள்ளார்.
சமரசம் செய்து...
பின்னர் கொலையை மறைக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் தனது மருமகனான மைசூரு மாவட்டம் கும்பாரகொப்பலு கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்(35) என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தனக்கு ஆதார் கார்டு எடுக்க வேண்டும் என்றும், அதனால் உடனடியாக பூரிகாலி கிராமத்திற்கு வருமாறும் கூறி சதீசை, மகாதேவசெட்டி அழைத்துள்ளார். அதன்பேரில் சதீசும் பூரிகாலி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வைத்து சதீசிடம், பிரேம குமாரியை கொலை செய்ததை கூறிய மகாதேவசெட்டி, கொலையை மறைக்க உதவும்படியும் கேட்டுள்ளார். அதற்கு மறுத்த சதீசை சமரசம் செய்து மகாதேவசெட்டி ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்.
சாலையில் உடல் வீச்சு
பின்னர் இருவரும் சேர்ந்து நள்ளிரவில் ஒரு சாக்குமூட்டையில் பிரேம குமாரியின் உடலை வைத்து கட்டி உள்ளனர். அதையடுத்து பிரேம குமாரியின் உடல் அடங்கிய சாக்கு மூட்டையை அவர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு உல்லம்பள்ளி பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு ஆள்நடமாட்டம் இல்லாததை அடுத்து சாலையிலேயே பிரேமகுமாரியின் உடலை வீசியுள்ளனர். மேலும் அவருடைய உடல் மேல் வைக்கோல்களை போட்டு மூடிவிட்டு இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் பிரேம குமாரியின் உடலை பெலகவாடி போலீசார் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக பிரேமகுமாரியின் செல்போனை கைப்பற்றி அவர் யார், யாரிடம் பேசியுள்ளார் என்ற தகவல்களை அறிந்து அதன்மூலம் விசாரணை நடத்தினர்.
கைது
மேலும் மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராம், கொலையாளிகளை கண்டுபிடிக்க மலவள்ளி துணை போலீஸ் சூப்பிரண்டு சைலேந்திரா, இன்ஸ்பெக்டர்கள் தர்மேந்திரா, உமாவதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவமாதய்யா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு துலங்கியது. அதாவது, பிரேமகுமாரிக்கும், அவருடைய உறவினரான மகாதேவசெட்டிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததும், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பிரேமகுமாரி கொலை செய்யப்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மகாதேவசெட்டியையும், கொலையை மறைக்க அவருக்கு உதவிய அவரது மருமகன் சதீசையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது பெலகவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.