மலைப்பாதையில் விழுந்து கிடக்கும் ராட்சத பாறைகளால் கூடலூர்-கேரளா இடையே போக்குவரத்து பாதிப்பு
மலைப்பாதையில் விழுந்து கிடக்கும் ராட்சத பாறைகளால் கூடலூர்-கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் 15 நாட்களாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூரில் இருந்து மலப்புரம், கோட்டயம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் மலைப்பாதையில் கடந்த 8-ந் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ராட்சத பாறைகள் விழுந்தன. மேலும் பல இடங்களில் சாலை உடைந்து துண்டாகி உள்ளது.
இதனால் கூடலூர்- கேரளா இடையே மக்கள் நடந்து கூட செல்ல முடியாத வகையில் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பஸ் மற்றும் சுற்றுலா வாகன போக்குவரத்துகள் முடங்கி உள்ளது. இதேபோல் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக மலப்புரம், கோட்டயம் உள்ளிட்ட இடங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரிகளின் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் மழையின் தாக்கம் குறைந்து உள்ளது. இதைத்தொடர்ந்து இயற்கை பேரிடர் பாதிப்புகளை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடை பெற்றது.
இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக திரும்பி உள்ளது. ஆனால் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் மலைப்பாதையில் சீரமைப்பு பணி இதுவரை தொடங்கப்படவில்லை. சாலையின் கேரள பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால், அந்த மாநில அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை தொடங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேரள அரசு அதிகாரிகள் கூறியதாவது:-
கூடலூர்- கேரள மலைப்பாதையில் பல கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை முழுமையாக சேதம் அடைந்து உள்ளது.
இதுதவிர ராட்சத பாறைகள் விழுந்து கிடக்கிறது. இதனை வெடி வைத்து அகற்ற முடியாமல் உள்ளது. அவ்வாறு பணியை மேற்கொண்டால் சாலை மேலும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. கேரளாவில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் சீரமைப்பு பணி முடிவடையாமல் உள்ளது. இதனால் மலைப்பாதையை சீரமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. குறைந்தது 2 மாதங்கள் வரை ஆக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதனிடையே கூடலூர்- கேரள மலைப்பாதையில் 15 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளதால், நீலகிரிக்கு சுற்றுலா வாகனங்கள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் கூடலூர் பகுதி வணிக ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதுடன் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
எனவே மலைப்பாதையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.