கோவைப்புதூரில், சிறப்பு காவல்படை முகாம் அருகே சந்தன மரம் வெட்டி கடத்தல் - 10 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
கோவைப்புதூரில் சிறப்பு காவல்படை முகாம் அருகே, வீட்டில் இருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்திச்சென்ற 10 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
போத்தனூர்,
கோவை மாநகரப்பகுதிக்கு உட்பட்ட கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முகாம் உள்ளது. இந்த முகாம் அருகே எக்ஸ்பிளாக் பகுதியில் வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்த வீட்டில், கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற காந்தி (72) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டு வளாகத்தில் ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டதை அடுத்து காந்தி வீட்டின் முன்பக்க மின்விளக்கை போட்டு கதவை திறந்து பார்த்தார்.
வெளியே பார்த்தபோது 10 பேர் கொண்ட கும்பல், வீட்டு வாசலில் நின்ற சந்தனமரத்தை எந்திரம் மூலம் வெட்டிக்கொண்டு இருந்தது. இதைப்பார்த்து காந்தி சத்தம் போட்டதை அடுத்து வெட்டிய சந்தன மரத்தை எடுத்துக் கொண்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதுகுறித்து காந்தி குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மர கடத்தல் கும்பலை தேடி வருகிறார்கள்.
வெட்டப்பட்ட சந்தன மரம் கடந்த 20 ஆண்டுகளாக அந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வந்தது. பகல் நேரத்தில் நோட்டமிட்டு இரவில் வந்து வெட்டி கடத்திச்சென்றுள்ளனர். சந்தன மரத்தின் பெரிய துண்டை எடுத்துக்கொண்டு கிளைகளை மட்டும் போட்டுச்சென்றுள்ளனர்.
கோவையில் பல இடங்களில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டும், அதில் தொடர்புடைய முக்கிய கும்பல் இன்னும் பிடிபடாமல் உள்ளது. சந்தன மர கடத்தல் கும்பலை கைது செய்து, கோவை நகரில் குடியிருப்பு பகுதிகளில் வளர்ந்து நிற்கும் சந்தன மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.