பனியன் நிறுவன விடுதியில் உணவு சாப்பிட்ட பெண் தொழிலாளர்கள் 59 பேருக்கு வாந்தி-மயக்கம்
பல்லடம் அருகே உள்ள பனியன் நிறுவன விடுதியில் உணவு சாப்பிட்ட பெண் தொழிலாளர்கள் 59 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம்,
பல்லடம் அருகே சேகாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இந்த பனியன் நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு அங்குள்ள விடுதியில் பெண் தொழிலாளர்கள் உணவு சாப்பிட்டனர். காலை உணவாக அவர்களுக்கு பருப்பு சாதம் வழங்கப்பட்டுள்ளது. பருப்பு சோறுக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் கொடுக்கப்பட்டது. பின்னர் டீ குடித்து விட்டு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.
பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது சில தொழிலாளர்கள் தங்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் வருவதாக தெரிவித்தனர். தொடர்ந்து உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்படி கூறியதால் அதிர்ச்சியடைந்த பனியன் நிர்வாகம், அந்த தொழிலாளர்களை உடனடியாக நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களில் ஏற்றி பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு 3 தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 59 தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் பனியன் நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சில தொழிலாளர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பின்னர் மாலையில் அவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பனியன் நிறுவனத்திற்கு சென்றனர்.
இது குறித்து டாக்டர்கள் கூறும்போது “கால நிலை காரணமாக, பருப்பு சோறு சாப்பிட்டவர்கள் சிலருக்கு வாந்தி வந்திருக்கலாம். அப்போது மற்றவர்களுக்கும் அந்த உணர்வே தோன்றியிருக்கலாம். மேலும் கஞ்சி, மோர் சாதம் சாப்பிட்டு ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கிறோம் என்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் உணவு பாதுகாப்பு அதிகாரி கேசவராஜ் விரைந்து தனியார் மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களை சந்தித்து விவரம் கேட்டறிந்தார். பின்பு அவர் கூறும் போது “சீதோஷ்ண நிலை காரணமாக செரிமானம் ஆகாமல் வாந்தி-மயக்கம் வந்திருக்கலாம். அந்த உணவு மாதிரி பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், டாக்டர்களிடம் இது குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பனியன் நிறுவனத்தில் காலை உணவு சாப்பிட்ட 59 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.