ரிஷிவந்தியம் அருகே, விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ரிஷிவந்தியம் அருகே விவசாயி வீட்டில் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-22 22:45 GMT
ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அடுத்த காட்டு எடையாரை சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவருடைய மனைவி மல்லிகா(வயது 50). இவர்கள் 2 பேரும் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டின் அருகே வைத்துவிட்டு, அதே பகுதியில் உள்ள தங்களது நிலத்துக்கு சென்று விட்டனர். பின்னர் இரவு 7 மணியளவில் மல்லிகா மட்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ, இரும்பு பெட்டி திறந்து கிடந்தது. இதையடுத்து அவற்றை சோதனை செய்து பார்த்தபோது அவற்றில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை காணவில்லை. இவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடைபெற்ற வீட்டை பார்வையிட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கணேசன் குடும்பத்தினர், வீட்டை பூட்டி விட்டு சாவியை வெளியே வைத்து சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை திறந்து வீட்டில் இருந்த பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருடுபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்