அரசு கலைக்கல்லூரிகளில் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததால் கவுரவ விரிவுரையாளர்கள் கடும் அவதி - முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்காததால் கடும் அவதி அடைந்துள்ளனர். இதில், முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-08-22 21:45 GMT
காட்பாடி,

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் சுழற்சி 1-ல் 1,843 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மே மாதம் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் அந்த மாதம் சம்பளம் இல்லை. மீதமுள்ள ஏப்ரல், ஜூன், ஜூலை ஆகிய 3 மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது:-

எங்களுக்கு கொடுப்பதே குறைந்த சம்பளம் தான். அந்த சம்பளத்தை கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை. அதனால் குடும்பம் நடத்த முடியாமல் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். கல்லூரிகளுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றால் பெட்ரோலுக்கு அதிகம் செலவாகிறது என்று பஸ்சில் சென்று வருகிறோம். குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கட்டணம் கட்ட கடன் வாங்கி உள்ளோம். அதனால் மிகுந்த மனஉளைச்சலில் பணிபுரிந்து வருகிறோம்.

எனவே சம்பள பிரச்சினையில் முதல்-அமைச்சர் தலையிட்டு உடனடியாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யூ.ஜி.சி.யின் 6-வது ஊதியக்குழு மற்றும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும். 2012-ம் ஆண்டே 6-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை அரசு அதனை அமல்படுத்தவில்லை. அதனை அமல்படுத்தி இருந்தால் எங்களுக்கு சம்பளம் மாதம் ரூ.43 ஆயிரம் கிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி இருந்தால் சம்பளம் ரூ.52 ஆயிரம் கிடைக்கும். திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளமாக ரூ.52 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

அரியானா மாநில அரசு சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.57 ஆயிரம் வழங்குகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. இதிலும் வேறுபாடு காணப்படுகிறது. சட்டக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே சம்பள வேறுபாடுகளை நீக்கி 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு உடனடியாக அமல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்