திருமணம் செய்வதாக ஏமாற்றி அழைத்து வந்து,10-ம் வகுப்பு மாணவியை பஸ்நிலையத்தில் தவிக்க விட்ட காதலன்

திருமணம் செய்வதாக ஏமாற்றி அழைத்து வந்து, 10-ம் வகுப்பு மாணவியை திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்ற காதலன் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-08-22 23:00 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி ஒரு சிறுமி தனியாக நின்றுகொண்டிருந்தாள். இதைப்பார்த்த போலீசார் அவளிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த சிறுமி எதையும் கூறாமல் தேம்பி, தேம்பி அழுதாள். இதையடுத்து அந்த சிறுமியை மீட்ட போலீசார் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் அவளை ஒப்படைத்தனர்.

அங்கு அந்த சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவள் கூறிய தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. அறியாத பருவத்தில் புரியாத புதிராய் முளைத்த காதலால் அவள் பஸ்நிலையத்தில் தவித்தது தெரியவந்தது. மகளிர் போலீசாரிடம் அவள் கூறியதாவது:-

நான் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள். எனது வயது 16. திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது குடும்பத்தினருடன், மதுரையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக ரெயிலில் பயணம் செய்தேன். அப்போது அதே ரெயிலில் பயணம் செய்த ஒரு வாலிபர், எனக்கு அறிமுகமானார். சிறிது நேரத்திலேயே என்னுடன் நட்பாக பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

அவரின் கனிவான பேச்சில் மயங்கிய நான், என்னுடைய செல்போன் எண்ணை அவருக்கு கொடுத்தேன். அவரும் தனது செல்போன் எண்ணை என்னிடம் கொடுத்தார். தான், திண்டுக்கல் பேகம்பூரில் வசிப்பதாக அவர் தெரிவித்தார். பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டோம். நாளடைவில் எங்களது பழக்கம் காதலாக மாறியது. செல்போனிலேயே எங்கள் காதலும் வளர்ந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம், எங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் என்னை கண்டித்தனர். ஆனாலும் காதலனுடன் பேசுவதை நான் நிறுத்தவில்லை. இதையறிந்த பெற்றோர், எனது செல்போனை பறித்துக்கொண்டனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்த நான், வேறு ஒருவர் செல்போன் மூலம் எனது காதலனுக்கு விவரத்தை தெரிவித்தேன்.

அவரும் என்னை திண்டுக்கல்லுக்கு அழைத்துச்சென்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வதாக கூறி நம்பிக்கை அளித்தார். அதன்படி நேற்று முன்தினம் திருப்பூருக்கு வந்த அவருடன், திருமண கனவுகளை சுமந்துகொண்டு திண்டுக்கல்லுக்கு நான் புறப்பட்டேன். இருவரும் பஸ் மூலம் அன்று இரவு 8 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தோம்.

பின்னர் பஸ் நிலையத்தில் என்னை காத்திருக்கும்படி கூறிய அவர், தான் சென்று வீட்டில் உள்ளவர்களிடம் திருமணத்துக்கு சம்மதம் வாங்கி வருவதாக கூறிச்சென்றார். ஆனால் நள்ளிரவு ஆகியும் அவர் திரும்ப வரவில்லை. இதற்கிடையே பஸ் நிலையத்திற்கு வந்தவர்களில் சிலர் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கத்தொடங்கினர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் நான் தவித்துக்கொண்டிருந்த போது, அங்கு ரோந்து பணிக்காக வந்த போலீசார் என்னை மீட்டனர்.

பின்னர் போலீசார் மாணவியின் பெற்றோரை வரவழைத்தனர். அவர்களிடம் மாணவி ஒப்படைக்கப்பட்டாள். இதனையடுத்து அவளை பெற்றோர் திருப்பூருக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே திருமணம் செய்வதாக ஏமாற்றி அழைத்து வந்து 10-ம் வகுப்பு மாணவியை திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்ற காதலன் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்