அந்தியூர் அருகே பரபரப்பு: நடுரோட்டில் நின்று கொண்டு வாகனங்களை வழிமறித்த யானை
அந்தியூர் அருகே நடுரோட்டில் நின்று கொண்டு வாகனங்களை ஒற்றை யானை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, செந்நாய், கருங்குரங்கு, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் மட்டும் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. குறிப்பாக சாலையில் நின்று கொண்டு வாகனங்களை விரட்டும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை பர்கூர் ரோட்டில் பூரி என்ற இடத்தில் நேற்று பகல் 11 மணி அளவில் உலா வந்தது. சாலையோரங்களில் வளர்ந்து காணப்படும் மரம், செடிகளை முறித்து தின்றது. பின்னர் நடுரோட்டில் வந்து நின்று கொண்டது. அந்த இடத்தை விட்டு நகரவில்லை. யானை ரோட்டில் நின்றதை கண்டதும் வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களுடைய வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்திக்கொண்டனர். அப்போது ஒருசிலர் தங்களுடைய செல்போனில் அந்த யானையை படம் பிடித்தனர். இந்த யானை சுமார் 1 மணி நேரம் நடுரோட்டில் வாகனங்களை வழிமறித்தபடி நின்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
ஒரு சில வாகன ஓட்டிகள் மட்டும் தங்களுடைய வாகனங்களில் அங்கிருந்து செல்ல முயன்றனர். மேலும் அதிக ஒலி எழுப்பினார்கள். இதனால் ஆவேசமடைந்த அந்த யானை, வாகன ஓட்டிகளை நோக்கி வேகமாக ஓடிவந்தது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அங்கிருந்து தங்களுடைய வாகனங்களை பின்னோக்கி வேகமாக நகர்த்தினர்.
மேலும் 2 சக்கர வாகன ஓட்டிகள், வாகனங்களை அங்கேயே போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1½ மணி நேரம் ரோட்டில் போக்குகாட்டிய அந்த ஆண் யானை மதியம் 12.30 மணி அளவில் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னர்தான் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.
யானை ஒன்று நடுரோட்டில் நின்றதால் அந்தியூர்-பாகூர் ரோட்டில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.