ஈரோடு பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நகரும் சாய்தள மேடை

ஈரோடு பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நகரும் சாய்தள மேடை அமைக்கப்பட்டு உள்ளது.;

Update: 2019-08-22 22:00 GMT
ஈரோடு,

ஈரோடு பஸ் நிலையத்தில் தினமும் 600-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் பயணங்களை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் வசதிக்காக ஓய்வு அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்பட பல்வேறு வசதிகளை மாநகராட்சி சார்பில் செய்து தரப்பட்டு உள்ளது. இதேபோல் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சக்கர நாற்காலி வசதியும் உள்ளது.

இந்த நிலையில் பஸ் படிக்கட்டில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி செல்லும் வகையில் இரும்பு சாய்தள மேடை வசதி அமைக்கப்பட்டு உள்ளது. நகரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள அந்த மேடையை மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ஏறும் பஸ்களின் படிக்கட்டு அருகில் வைக்கப்படும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

ஈரோடு பஸ் நிலையத்தில் 7 ரேக்களில் பஸ்கள் நிறுத்தப்படுகிறது.

அங்கு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சக்கர நாற்காலி வசதி உள்ளது. மேலும், பஸ்களில் நேரடியாக ஏறுவதற்காக நகரும் சாய்தள மேடை அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு ரேக்கிற்கு ஒரு சாய்தள மேடை வீதம் மொத்தம் 7 சாய்தள மேடைகள் வழங்கப்பட்டு உள்ளன. எனவே மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் இந்த சாய்தள மேடையை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்