தமிழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் சேர்ப்பு: அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

தமிழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் திருச்செந்தூரில் நேற்று மாலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2019-08-22 22:15 GMT
திருச்செந்தூர்,

தமிழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்வதற்கு 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் கவுன்சிலிங் மூலம் 83 ஆயிரத்து 396 மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். மேலும் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 50 ஆயிரம் மாணவர்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சுமார் 40 ஆயிரம் மாணவர்களும் சேர்ந்துள்ளனர். மொத்தம் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட இடங்களையும் சேர்த்து காலியாக இருப்பதாக கணக்கிடுவதால், கவுன்சிலிங்கில் அதிக சீட் காலியாக இருப்பதாக தவறாக கருதப்படுகிறது. ஆனால் ஆண்டுதோறும் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சீராக உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.546 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு 45 அரசு கலை அறிவியல் கல்லூரிகளையும், 16 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளையும், 4 அரசு பொறியியல் கல்லூரிகளையும் தொடங்கினார்.

அதேபோன்று 2017-ம் ஆண்டுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12 அரசு கலை அறிவியல் கல்லூரிகளையும், 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளையும் தொடங்கி உள்ளார். இந்த ஆண்டு ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதாவின் ஆட்சியில் 961 புதிய பாடப்பிரிவுகளும், 2017-ம் ஆண்டுக்கு பிறகு 705 பாடப்பிரிவுகளும் என மொத்தம் 1,666 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் மாணவர்கள் விரும்பிய பாடங்களில் சேர்ந்து உயர்கல்வி பயில முடிகிறது.

உயர்கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு மத்திய அரசின் ஆதி திராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை வழங்காததால், அதனை தமிழக அரசே ஈடுகட்டி வழங்கி வருகிறது. இன்னும் ஓராண்டுக்கு மட்டும் மாணவர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டி உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். 

மேலும் செய்திகள்