முதல்-அமைச்சரின், சிறப்பு குறைதீர்க்கும் முகாம் தொடங்கியது - எம்.எல்.ஏ.க்கள் மனுக்கள் வாங்கினர்
ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் தொடங்கியது. எம்.எல்.ஏ.க்கள் மனுக்கள் வாங்கினர்.
ஈரோடு,
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கடந்த 19-ந் தேதி சேலம் மாவட்டத்தில் அவர் முகாமை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் தொடங்கியது.
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1, 2, 3 ஆகிய வார்டுகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முகாமை பவானிசாகர் தொகுதி ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்தி, புளியம்பட்டி நகராட்சி பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு, முதியோர்உதவித்தொகை, தெருவிளக்கு, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ.விடம் வழங்கினார்கள். இதில் புளியம்பட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி, முன்னாள் நகராட்சி துணை தலைவர் பாபு உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உள்பட்ட அவல்பூந்துறை பேரூராட்சியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் செயல் அலுவலர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது. மொடக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கதிர்வேல், ஒன்றிய முன்னாள் துணை தலைவர் கணபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மயில் என்கிற சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மொத்தம் 160-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
குமாரவலசு கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, ஆவின் இயக்குனர் அசோக், பள்ளியூத்து கூட்டுறவு சங்க தலைவர் கொற்றவேல் சேதுபதி, நவரசம் கல்லூரி தலைவர் தாமோதரன், பொருளாளர் சிவகுமார், முன்னாள் தலைவர் பழனிச்சாமி, மொடக்குறிச்சி தாசில்தார் கவுசல்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் அருகே டி.ஜி.புதூரில் உள்ள பெரிய கொடிவேரி பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் செயல் அலுவலர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் மனுக்கள் அளித்தனர்.
இதேபோல் சத்தியமங்கலம்-கோபி ரோட்டில் உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சியில் உள்ள 1, 2, 3 உள்ளிட்ட வார்டுகளில் செயல் அலுவலர் ஆர்.மணிவண்ணன் தலைமையில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மொத்தம் 750 மனுக்கள் பெறப்பட்டது. இதில் அரியப்பம்பாளையம் பேரூராட்சியின் அ.தி.மு.க. பொறுப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சிக்கான முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அத்தாணி காலனியில் நடந்தது. முகாமில் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், செயல் அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
மொத்தம் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா திடீர் ஆய்வு செய்தார். முகாமில் அந்தியூர் தாசில்தார் மாலதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் விஜயநாத் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபாகரன், விஜயராஜ் ஆகியோரிடம் வழங்கினர். முகாமில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சரவணன், துணைத்தலைவர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சென்னசமுத்திரம் பேரூராட்சியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வருந்தியாபாளையத்தில் உள்ள பள்ளியில் செயல் அலுவலர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. முகாமில் கொடுமுடி தாசில்தார் சிவசங்கர், கிராம நிர்வாக அலுவலர் கோமதி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். வெங்கம்பூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் மகேந்திரன் தலைமையில் நடந்த முகாமில், அலுவலக உதவியாளர் வரலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் இளமதி மனுக்களை வாங்கினர்.
அய்யம்பாளையம், முருகம்பாளையம், எழுநூற்றிமங்கலம், குப்பம்பாளையம், இச்சிப்பாளையம், அஞ்சூர் ஆகிய ஊராட்சிகளிலும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த ஊராட்சிகளில் நடந்த முகாம்களுக்கு கொடுமுடி தாசில்தாருடன் வருவாய் வட்ட ஆய்வாளர் நிர்மலாதேவி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமித்ரா, மாரிமுத்து ஆகியோர் சென்று ஆய்வு நடத்தினர்.
ஊஞ்சலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் ஊஞ்சலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ருக்குமணி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
இதேபோல் வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சியில் நடந்த முகாமில், பேரூராட்சி செயல் அலுவலர் மாதவன் கலந்து கொண்டு, 4-வது வார்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கிளாம்பாடி பேரூராட்சிக்கான முகாம் சோளங்காபாளையம் நில வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நடந்தது.
முகாமில் செயல் அலுவலர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயலட்சுமி, கல்யாணி ஆகியோர் 1 முதல் 4-வது வார்டு வரை உள்ள பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினர்.