பொக்லைன் எந்திரம் மோதி தொழிலாளி படுகாயம்-நடுரோட்டில் தவித்த குழந்தையால் பரபரப்பு
சேலத்தில் பொக்லைன் எந்திரம் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அப்போது அவரது குழந்தை நடுரோட்டில் தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் தாதகாப்பட்டி சண்முகாநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). தொழிலாளி. இவருக்கு மேகலா என்ற மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று காலை கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் மகன் மற்றும் நண்பரான மாரியப்பன் என்பவருடன் கொண்டலாம்பட்டியில் இருந்து சண்முகா நகருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நெத்திமேடு பகுதியில் வந்தபோது, அந்த வழியாக சென்ற பொக்லைன் எந்திரம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது. இதில் 3 பேரும் தடுமாறி கீழே விழுந்தனர். கண்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மாரியப்பன் மற்றும் குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மாரியப்பன் எழுந்து, கண்ணனை மட்டும் ஆட்டோவில் ஏற்றி தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். குழந்தையை அங்கே விட்டு விட்டு சென்றார். இதனால் 2 வயது குழந்தை மட்டும் நடுரோட்டில் தனியாக தவித்து அழுது கொண்டிருந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பெயர் கூட சொல்ல தெரியாத அந்த குழந்தை, கையில் இருந்த காயத்தை காட்டி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. இதனிடையே உறவினர்கள் அங்கு வந்து குழந்தையை அழைத்து சென்றனர். படுகாயம் அடைந்த கண்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்போன் பேசியவாறு கண்ணன் மோட்டார் சைக்கிளை ஓட்டியதால் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.