விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது - போலீசார் கட்டுப்பாடு
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்கக் கூடாது, பூசணிக்காய் உடைக்கக் கூடாது என்று போலீசார் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.
பேரையூர்,
நாடு முழுவதும் வருகிற 2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை போலீசார் கூறி உள்ளனர். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், பேரையூர் போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், வீரசோலை, பால்சாமி உள்பட போலீசார் கலந்துகொண்டனர். மேலும் பேரையூர், சாப்டூர், அத்திப்பட்டி, குமராபுரம், தும்மநாயக்கன்பட்டி, மங்கள்ரேவ், வண்டாரி, வண்டபுலி, பழையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விநாயகர் சிலை அமைப்பு குழுவினரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் போலீசார் கூறிய அறிவுரைகளை கருத்தில் கொண்டு விவாதம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் போலீசார் கூறியதாவது:-
களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளே வைக்கப்பட வேண்டும். விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தில் 12 நபர்கள் இருக்க வேண்டும். போலீசார் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் சிலையை வைக்க வேண்டும். சிலை வைக்கப்படும் இடத்தில் சந்தேகமான முறையில் சைக்கிள்கள், இதர வாகனங்கள், பொருட்கள் இருந்தால் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். சிலையை எக்காரணம் கொண்டு கேட்பாரற்று விட்டு செல்லக்கூடாது. சிலை எடுத்து செல்லும்போது போக்குவரத்துக்கு இடையூறு இருக்கக்கூடாது. சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளரிடம் முன் அனுமதி பெறவேண்டும். சிலை உயரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது இதர மதத்தினரை புண்படும்படி பேசக்கூடாது. சிலை எடுத்து செல்லும்போது வாணவெடி மற்றும் பட்டாசு வெடிக்க கூடாது. சிலை செல்லும் வழியில் திருஷ்டிக்காக பூசணிக்காய் உடைக்க கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது. ஊர்வலத்தின்போது காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.