முதல்-அமைச்சரின் நடவடிக்கையால், பட்டாசு தொழில் பிரச்சினைக்கு ஒரு மாதத்தில் நல்ல தீர்வு ஏற்படும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால் பட்டாசு தொழில் பிரச்சினைக்கு ஒரு மாத காலத்தில் நல்ல தீர்வு ஏற்படும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.;

Update: 2019-08-22 23:00 GMT
விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி 906 ஊருணிகள், 165 சிறு கண்மாய்கள், 65 பொதுப்பணித்துறை கண்மாய்கள் ஆகியவற்றில் குடிமராமத்து பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

காஷ்மீர் பிரச்சினையை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. காஷ்மீர் பிரச்சினை என்பது நாட்டு நலன்கருதி மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் மறுத்ததை தொடர்ந்து, சட்டப்படி சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை ஆகும். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை. பொருளாதார குற்றத்துக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த தேர்தலின்போது தேர்தல் முடிந்த பின்னர் அ.தி.மு.க. மந்திரிகள் சிறைக்கு போவார்கள் என்று கூறினார். ஆனால் இன்று அவர் தான் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். ஜெயலலிதாவை போலீசார் கைது செய்ய வரும் போது அவர் ஒன்றும் கதவை மூடிவிடவில்லை. சாமி கும்பிட்டுவிட்டு போலீசாருடன் சென்றார். ஆனால் ப.சிதம்பரம் வீட்டிற்குள் போய் கதவை மூடிக்கொண்டார். அதனால் தான் சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

தி.மு.க.வினர் காஷ்மீர் பிரச்சினையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். சுதந்திரத்துக்கு முன் வெள்ளையர்களுக்கு ஆதரவாக இங்கு சிலர் போராட்டம் நடத்தி கொண்டு இருந்தனர். அதேபோல் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சில அன்னிய சக்திகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகின்றனர். பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வலுவாக உள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் அவர் நல்ல முடிவு எடுத்துள்ளார். இந்தியாவை பார்த்து உலக நாடுகள் அதிசயிக்கின்றன. ராணுவ பலத்தை பார்த்து அண்டைநாடுகள் அச்சப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வல்லரசாகும்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது கருணாநிதி தான். அதற்கு அனுமதி அளித்தது காங்கிரஸ். சிவகாசி முதல் ராமேசுவரம் வரை உள்ள மக்களிடம் கருத்து கேட்டா? கச்சத்தீவை கருணாநிதி தாரை வார்த்தார். என்ன காரணத்திற்காக கொடுத்தார் என்பது அவர்களுக்கு தெரியும். காஷ்மீரை மீட்டதை போல கச்சத்தீவை மீட்கவும் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அது பற்றிய விவரத்தை வெளியில் சொல்ல முடியாது. ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய பாவத்துக்கு தான் ப.சிதம்பரத்துக்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை.

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறுக்கு வரும் கர்ப்பிணிகள் இறந்து விடுவதாக கூறுவது தவறு. ஒரு சிலர் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அங்கு சென்று தான் இறந்துள்ளனர். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. பிரதமர் மோடி தலைமையில் நாட்டில் பொருளாதார வளம் ஏற்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டாசு தொழிலுக்கு பாதுகாவலனாக விளங்குகிறார். தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்து இதுதொடர்பான நிபுணர்கள் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் கலந்தாய்வு செய்து வருகின்றனர். இது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உரிய உத்தரவுகள் பெறப்படும். ஒரு மாத காலத்தில் முதல்-அமைச்சர் முயற்சியால் பட்டாசு தொழில் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படுவது உறுதி. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 1½ கோடி பட்டாசு தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் விடியல் ஏற்படும். விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணியில் சேர வந்த பெண் அதிகாரிக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறுவது தவறு. அவ்வாறு ஏதும் பிரச்சினை ஏற்படவில்லை. எனினும் கல்வித்துறை பணி சிறக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நோய் தடுப்பு மற்றும் மருத்துவத்துறை, குடிநீர் வழங்கல் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம், எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்