வேதாரண்யம் அருகே செல்வராசு எம்.பி. மீது கத்தி வீசிய 3 பேர் கைது

வேதாரண்யம் அருகே செல்வராசு எம்.பி. மீது கத்தி வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-22 22:15 GMT
வேதாரண்யம்,

நாகை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் செல்வராசு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து அவர் வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடந்த 20-ந் தேதி கோடியக்கரையில் திறந்த வாகனத்தில் சென்று நன்றி தெரிவித்தார்.

அகஸ்தியன்பள்ளி காளியம்மன் கோவில் தெரு பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்து அவர் மீது கத்தி வீசப்பட்டது. ஆனால் அந்த கத்தி அதிர்ஷ்டவசமாக அவர் மீது படாமல் அவரது ஜீப் மீது விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

3 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். தீவிர விசாரணையில் செல்வராசு எம்.பி. மீது கத்தி வீசியது அகஸ்தியன்பள்ளியை சேர்ந்த லோகு(வயது 24), அப்பு என்கிற வேதமூர்த்தி(35), லெட்சுமணன்(48) ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்