மந்திரி பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி: டெல்லி புறப்பட்டு சென்றார் எடியூரப்பா அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு

மந்திரி பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி புறப்பட்டு சென்றார்.

Update: 2019-08-22 22:30 GMT
பெங்களூரு, 

மந்திரி பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் இன்று(வெள்ளிக் கிழமை) அமித்ஷாவை சந்திக்க உள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பா.ஜனதா ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இருப்பினும் மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை. கடந்த 20-ந் தேதி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக 17 பேர் மட்டும் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

இதனால் மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்த பா.ஜனதா மூத்த தலைவரான உமேஷ் கட்டி, திப்பாரெட்டி, ரேணுகாச்சார்யா, பாலசந்திர ஜார்கிகோளி உள்பட பலர் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதனால் மீண்டும் கர்நாடக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 7.40 மணிக்கு விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி புறப்பட்டு சென்றார்.

அமித்ஷாவுடன் சந்திப்பு

எடியூரப்பா இன்று (வெள்ளிக்கிழமை) பா.ஜனதா தேசிய தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு பற்றி ஆலோசனை நடத்த உள்ளார். அத்துடன் மந்திரி சபை விரிவாக்கத்தால் மாறி உள்ள அரசியல் சூழல் குறித்தும், அதிருப்தியாளர்களுக்கு மந்திரி பதவி கொடுக்க மீண்டும் மந்திரி சபையை விரிவாக்குவதா? அல்லது வேறு ஏதேனும் வழியில் அவர்களை சமாதானப்படுத்துவதா? என்பது குறித்து எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளார்.

இதற்கிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இதனால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் தங்கியுள்ளனர். தற்போது எடியூரப்பா டெல்லி சென்றுள்ளதால், அவரை தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பின்போது தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பன உள்பட சில கோரிக்கைகளை எடியூரப்பாவிடம் கூற உள்ளனர். இதுதவிர கட்சி மேலிட தலைவர்களுடன் சந்திக்க ஏற்பாடு செய்து வழங்கும்படியும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவிடம் வலியுறுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்