வருமான வரி சோதனை குறித்து நேரில் ஆஜராக சம்மன்: ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமாரின் மனு மீது விசாரணை நிறைவு
வருமான வரி சோதனை தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட சம்மனுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறைவடைந்தது.
பெங்களூரு,
வருமான வரி சோதனை தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட சம்மனுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறைவடைந்தது. வருகிற 28-ந் தேதி தீர்ப்பு வழங்குவதாக ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
வருமான வரி சோதனை
கர்நாடக காங்கிரசில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் டி.கே.சிவக்குமாரும் ஒருவர். முந்தைய கூட்டணி அரசில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றினார். அதற்கு முன்பு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டி.கே.சிவக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி ரொக்கம் சிக்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜராகும்படி அவருக்கு அமலாக்கத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் டி.கே.சிவக் குமார் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இடைக்கால விலக்கு
அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜராவதில் இருந்து டி.கே.சிவக்குமாருக்கு இடைக்கால விலக்கு அளிக்கப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் அதுதொடர்பான தீர்ப்பு வருகிற 28-ந் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.