ராயபுரத்தில் 18 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி ‘செல்பி’ எடுத்த வாலிபர் தவறி விழுந்து சாவு

ராயபுரத்தில், குடி போதையில் 18 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி ‘செல்பி’ எடுத்த வாலிபர், தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-08-22 22:00 GMT
திருவொற்றியூர்,

சென்னை ராயபுரம் கல்லறை சாலையில் அண்ணா நீரேற்றுநிலையம் உள்ளது. இங்கிருந்து வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையத்தில் காலியாக இருந்த 28 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 18 அடி உயர குடிநீர் தொட்டியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக ராயபுரம் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அந்த வாலிபர் குடிபோதையில் 18 அடி உயரம் உள்ள குடிநீர் தொட்டியில் ஏறி ‘செல்பி’ எடுத்தபோது, குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. சம்பவம் குறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்