“முதல்-அமைச்சர் நினைத்தால் அமைச்சர் பதவி கிடைக்கும்” - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி
முதல்-அமைச்சர் நினைத்தால் தன்னைப் போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
திருப்பரங்குன்றம்,
மதுரை திருநகரில் உள்ள சவிதா பாய் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வீடு கட்டும் கூட்டுறவு சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் சந்திரபாண்டியன் வரவேற்றார். விழாவில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார். விழாவில் அரசு வக்கீல் ரமேஷ், கூத்தியார்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் நிலையூர் முருகன், முன்னாள் கவுன்சிலர் முத்துக்குமார், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் பன்னீர்செல்வம், திருநகர் பாலமுருகன் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கருத்த கண்ணன், சாக்கிலிப்பட்டி பாலமுருகன், தோப்பூர் விஜயகண்ணன், திருநகர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பால் விலையை உயர்த்த வேண்டுமென்று சட்டமன்றத்தில் வலியுறுத்தியது தி.மு.க.தான். பால் கொள்முதல் செய்பவர்களின் கஷ்டத்தை முதல்-அமைச்சர் புரிந்து கொண்டுதான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
அஞ்சல் துறையாக இருந்தாலும், ரெயில்வே துறையாக இருந்தாலும் இந்தி மொழி திணிக்கப்படுமேயானால் அதனை உடனடியாக எடுத்துக் காட்டி மத்திய அரசு திரும்பப் பெறும் நிலையை தமிழக அரசு ஏற்படுத்தும்.
மழைநீர் சேகரிப்பு திட்டம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்ட திட்டம். அதனை செயல்படுத்துவதில் மக்களுக்கு சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. பள்ளி கட்டிடம், அரசு கட்டிடம் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான் 53 ஆண்டு காலம் அரசியல் வாழ்வில் இருந்து வருகிறேன். அரசிடம் எந்த துறை அமைச்சர் பதவியையும் கேட்பது இல்லை. முதல்-அமைச்சர் நினைத்தால் வாய்ப்பு கொடுக்கலாம். அதற்கான சூழ்நிலை உருவானால் வாய்ப்பு கொடுக்கலாம். என்னைப்போல பல பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. எம்.எல்.ஏ. பதவியில் இருந்தே பல்வேறு சாதனைகளை செய்ய முடிகிறது. எங்களுடைய நோக்கம் பொது பணியாற்ற வேண்டும் என்பது தான்.
இவ்வாறு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார்.